கடந்த 1952 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியானது. தற்போது இந்த படத்தின் தலைப்பு தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்க டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று (ஜனவரி 29) இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதன்படி அவர் பேசியதாவது, “பராசக்தி படம் சிவாஜி ரசிகர்களை காயப்படுத்தாது. இந்த படம் 1950 முதல் 1960 காலகட்டங்களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
பெரிய அளவில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாவது மூன்றாவது கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியிலும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் சிதம்பரத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் ஐந்து பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -