கடந்த ஒரு மாதமாக பட்டதாரி மகன் காணவில்லை என காவல் நிலையத்திற்கு நடையாய் நடக்கும் மாற்றுத்திறனாளி தந்தை மற்றும் தாய்.
திருநங்கையாக மாறியதால் வாலிபர் வீட்டிற்கு வர விரும்பவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருநங்கையாக மாறினாலும் தனது மகன் வீட்டிற்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என பெற்றோர் கண்ணீர் மல்க காவல் ஆணையர் அலுவலகத்தில் பேட்டி அளித்தனர்.


சென்னை வில்லிவாக்கம், பாரதி நகர், 2வது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். மாற்றுத்திறனாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஓம் பிரகாஷ்(22) மற்றும் சந்தியா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
சிவகுமார் அவரது மனைவியுடன் இணைந்து கோவில் திருவிழாக்களில் பூஜைக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகின்றார். சிவகுமாரின் மகன் பி.காம் பட்டதாரியான ஓம் பிரகாஷ் ஆங்காங்கே கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஓம்பிரகாஷ் திடீரென வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவரது நண்பர்கள், உறவினர்கள் என பல இடங்களில் ஓம் பிரகாஷை மாற்றுதிறனாளியான சிவகுமார் தேடியும் கிடைக்காததால் இது குறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ஓம்பிரகாஷின் செல்போனை சிவகுமார் ஆராய்ந்து பார்த்த போது அதில் வீடியோ ஒன்றை ஓம்பிரகாஷ் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் படித்த வேலை தொடர்பாக எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை எனவும் வேலை தொடர்பாக முதல்வர் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டாக வேலை கிடைக்காமல் பெற்றோருக்கு பாரமாக இருப்பதாகவும், இனி பாரமாக இருக்க விரும்பவில்லை, வீட்டை விட்டு செல்கிறேன் யாரும் தேட வேண்டாம் என ஓம் பிரகாஷ் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
வீடியோ ஆதாரங்கள் கொடுத்தும் பல நாட்களாகியும் வில்லிவாக்கம் போலீசார் சி.எஸ்.ஆர் கூட தராமலும், தனது மகனை கண்டுபிடித்து தராமலும் கடந்த 1 மாதங்களாக அலைக்கழிப்பதாக மாற்றுதிறனாளியான சிவகுமார் மற்றும் அவரது லட்சுமி இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிவகுமார், தினமும் தனது மகன் ஓம் பிரகாஷ் அவரது நண்பர்களிடம் நீண்ட நேரமாக தொலைபேசியில் பேசி வந்ததாகவும், தனது மகன் சம்பாதிக்கும் பணத்தை அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வந்ததாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் தங்களது மகனை அவர்கள் சிறைப்பிடித்து வைத்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் ஓம்பிரகாஷின் நண்பர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, ஓம்பிரகாஷ் திருநங்கையாக மாறப்போவதால் வீட்டிற்கு செல்ல அவர் விரும்பவில்லை என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருநங்கையாக மாறினாலும் பரவாயில்லை எனது மகனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.


