தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு- எடப்பாடி பழனிசாமி
அதிமுக – பாஜக கூட்டணியில் தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில் தான் போட்டியிட்டோம். நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடு தான் பயணம் செய்து வருகிறோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அதிமுக ஆட்சி காலத்தில் 110 விதியின் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் பட்டியல் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். 68 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 29 சதவீத அறிவிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த பணிகளும் நடைபெறவில்லை என நிதியமைச்சர் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுகிறார்.

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதன் முதலில் தொடங்கியது அதிமுக ஆட்சி காலத்தில் தான். அட்சய பாத்திரம் திட்டத்தின் மூலமாக சென்னை மாநகராட்சி பள்ளியில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அந்த திட்டத்தை முதல் முதலாக தொடங்கப்பட்டது அதிமுக தான். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. கஞ்சா விற்பனை அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. ஆனால் அதனை மறைத்து பேசுகிறார்கள். கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு தடையாக இருந்ததாலேயே பெரம்பூரில் அதிமுக பகுதி செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் எது கிடைக்கிறதோ இல்லையோ, கஞ்சா தாராளமான புழக்கத்தில் உள்ளது. இது மக்களிடையே பதட்டத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் அம்மா உணவகங்களில் மக்களுக்கு உணவு ருசியாக வழங்கப்பட்டது. தற்போது அம்மா உணவகத்திற்கு வழங்கப்படும் பொருட்களை குறைத்ததால் தரம் இல்லாத உணவு வழங்கப்படுகிறது. இதில் என்ன ஆதாரம் ஆட்சியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரியவில்லை. ஆட்சியாளர்கள் அம்மா உணவகங்களை ஆய்வு செய்து தவறு இருக்கும் இடங்களை சீர் செய்யுங்கள் என்று அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கிறோம். ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் ஹிந்தியில் அச்சிட வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது” என்றார்.


