நானி நடிக்கும் தி பாரடைஸ் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தமிழில் வெப்பம், நான் ஈ ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். தற்போது இவரது நடிப்பில் ஹிட் 3 எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் 2025 மே 1 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இவர் தசரா படத்தின் இயக்குனர், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நானியின் 33 வது படமான இந்தப் படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நானி இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அத்துடன் இப்படம் 2026 மார்ச் 26ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் நடிகை கிரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நானி மற்றும் க்ரித்தி ஷெட்டி ஆகிய இருவரும் இணைந்து ஷியாம் சிங்க ராய் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்த படத்தில் சோனாலி குல்கர்னி, மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.