வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘கோட்’ திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. அதேசமயம் வெங்கட் பிரபு, அக்ஷய் குமாரிடம் கதை சொன்னதாகவும் தகவல் வெளியானது. இது தவிர வெங்கட் பிரபு, சென்னை 600028 படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போவதாகவும் பேச்சு அடிபட்டது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால், வெங்கட் பிரபுவிடம் அடுத்த ஆண்டு இறுதியில் தான் கால்ஷீட் தருவேன் என்று சொன்னதாகவும், அதற்கு முன்பாக வெங்கட் பிரபு வேறொரு படத்தை இயக்க திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது.
தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நடிகர் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபுவின் முழு ஸ்கிரிப்ட்டையும் படித்து விட்டதால் அவருக்கு ஓகே சொல்லிவிட்டாராம். ஆதலால் 2025 ஆகஸ்ட் மாதத்தில் இவர்களது கூட்டணியிலான புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழு சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


