நடிகர் ரஜினி, டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டியுள்ளார்.
கடந்த மே 1ஆம் தேதி அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, ரமேஷ் திலக், மிதுன், கமலேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களை தாண்டி புதிய வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி எமோஷனல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் திரைக்கதையை நகர்த்தி இருந்தார் அபிஷன். எந்த ஒரு இடத்திலும் தொய்வே இல்லாமல் எதார்த்தமாக படத்தை இயக்கியிருந்தார். இது தவிர படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருந்த நிலையில், குட்டி பையன் கமலேஷ் மற்றவர்களை அப்படியே தூக்கி சாப்பிட்டுருந்தான். அந்த அளவிற்கு கமலேஷின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது. இவ்வாறு இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினி, டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்து, படக்குழுவினரை செல்போனில் தொடர்பு கொண்டு, “சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்.. மிகச் சிறப்பான படம்” என்று பாராட்டியுள்ளார். இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது.