விஜய் பட நடிகை ஒருவர், சியான் 63 படத்தில் இணைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான விக்ரம், சினிமா மீதுதான் கொண்ட அதீத காதலினால் தனது உடலை மெழுகாய் உருக்கி நடிக்கக் கூடியவர். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான சேது, காசி, பிதாமகன் போன்ற படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது தவிர கடந்த ஆண்டு தங்கலான் எனும் திரைப்படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து அசத்தியிருந்தார் விக்ரம். அடுத்ததாக கடந்த மார்ச் மாதம் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் மண்டேலா, மாவீரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம். இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதன்படி தற்போது முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தில் கதாநாயகியாக யார்? நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அந்த வகையில், சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், விஜய்யின் கோட், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மீனாட்சி சௌத்ரியிடமும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இது தவிர இந்த படத்தில் ஒரு கதாநாயகியா? அல்லது இரண்டு கதாநாயகிகள் நடிக்கப் போகிறார்களா? என்பது தொடர்பான கேள்வியும் எழுந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் சியான் 63 படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.