தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இது தவிர இன்னும் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார் தனுஷ். இதற்கிடையில் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இதில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது.
மேலும் இந்த படத்தில் இருந்து முன்னோட்ட வீடியோவும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது தவிர இந்த படம் 2025 ஜூன் மாதம் 20ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ,கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூன் 12-ம் தேதி பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் வெளியாவதால் குபேரா படத்தில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -