தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும் 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் விஷால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் விஷால் – தன்ஷிகாவிற்கு எப்படி காதல் மலர்ந்தது என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா ஆகியோரின் நடிப்பில் விழித்திரு எனும் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது டி. ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய நடிகை தன்ஷிகா, டி. ராஜேந்தர் பெயரை சொல்ல மறந்ததால் மேடையிலேயே டி.ராஜேந்தர், தன்ஷிகாவை நாகரிகம் தெரியாதா? என்று திட்டினார். தன்ஷிகா, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் டி. ராஜேந்தர் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து அவரை திட்டி பேசினார். அருகில் இருந்த கிருஷ்ணா, விதார்த் ஆகிய நடிகர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர். இந்த நிகழ்வு அந்த சமயத்தில் பெரும் பேசுபொருளானது. அப்போது நடிகர் விஷால், டி. ராஜேந்தருக்கு கண்டனம் தெரிவித்து, தன்ஷிகாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அப்பொழுது இருந்து விஷாலுக்கும் – தன்ஷிகாவிற்கும் நட்பு உண்டாக, நாளடைவில் அது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது.