சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 74 வயதிலும் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ரஜினி. அந்த வகையில் இவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படமானது 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. மேலும் இவர், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படம் உருவாகி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படப்பிடிப்புகளும் அட்டப்பாடி, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தில் ரம்யா கிருஷ்ணன் ,யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார், நந்தமுரி பாலகிருஷ்ணா, எஸ்.ஜே. சூர்யா என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இது தவிர ஷாருக்கானிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் கோழிக்கோட்டில் ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினியை, விமான நிலையத்தில் சந்தித்த செய்தியாளர்கள் அவரிடம் கூலி, ஜெயிலர் 2 படம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினி, “ஜெயிலர் 2 படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்று உறுதியாக சொல்ல முடியாது. பெரும்பாலும் 2025 டிசம்பர் ஆகிவிடும். கூலி படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று அப்டேட் கொடுத்துள்ளார்.
- Advertisement -