நடப்பு நிதி ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த பிரப்வரி மாதம் 28ஆம் தேதி மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அறங்காவல் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024-2025ஆம் நிதி ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை, கடந்த 2023-2024ஆம் நிதி ஆண்டை போலவே 8.25 சதவீதமாக தொடர முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இது தொடர்பான பரிந்துரை மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக தொடர மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவின் மூலம் நாடு முழுவதும் உள்ள 7 கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். வட்டித் தொகை விரைவில் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது