பிரபாஸ் நடிப்பில் உருவாகும் தி ராஜாசாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1,2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பிரபாஸ். அதன் பின்னர் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக கல்கி 2898AD திரைப்படம் வெளியானது. அதே சமயம் இவர் ஸ்பிரிட், சலார் 2, கல்கி 2898AD – 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், மாருதி இயக்கத்தில் தி ராஜாசாப் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைக்க கார்த்திக் பழனி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து மாளவிகா மோகனன், யோகி பாபு, நிதி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வராதது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது. இந்நிலையில் இப்படம் 2025 டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி காலை 10.52 மணி அளவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.