மாமன் பட நடிகை, அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ‘பாம்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள அர்ஜுன் தாஸ் தற்போது புதிய வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி 1’, ‘மாரி 2’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்குகிறார். காமெடி கலந்த ஜானரில் உருவாகும் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி சென்னை மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்து வருகிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகிய இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் அப்போது இருவரும் டேட் செய்கிறார்களா? என்பது போன்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் தற்போது இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த வெப் தொடர் தொடர்பான அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தமிழில் கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 -இல் நடித்து பிரபலமானவர். கடைசியாக இவர் தக் லைஃப், மாமன் ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.