கரூரில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், மூன்று லட்சமாக திருப்பித் தருவதாக போலிச் சாமியாரை வைத்து, ஒரே ஊரை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட இளைஞர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்திற்குட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, சுப்பையா, வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரும் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் (எ) ஜோதியை ஏஜெண்டாக வைத்து, குஜிலியம்பாறையை சேர்ந்த “ஜீவநாதம்” என்ற போலியான அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். இவர்கள், சிவமயம் என்ற போலிச் சாமியாரை வைத்து 1 லட்ச ரூபாய் கொடுத்தால், 2 வருடத்தில் இருந்து 3 லட்ச ரூபாயாக திருப்பித் தரப்படும் என ஆசை வார்த்தை கூறி, சுமார் 500 நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு 5 ஆண்டுகளாக எந்தவித பதிலும் கூறாமல் ஏமாற்றி வருகின்றனர்.

பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், எந்த விசாரணையும் செய்யவில்லை. ஆனால், புகார் மனு கொடுத்தது தெரிந்து கொண்டு ஆட்களை வைத்து மிரட்டுகிறார்கள். இதுகுறித்து, புகார் அளிக்க ஊர் பொதுமக்கள் பயப்படுகின்றனர். எனவே, பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய நபர்கள் மீதும், போலிச் சாமியார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்காக அரசு கெஞ்ச வேண்டாம்…உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றினாலே போதும்- அன்புமணி ஆக்ரோஷம்