நடிகர் ரஜினி, பிரபாஸ் பட இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ரஜினியின் 171வது படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் ரஜினி, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின், சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்னும் ரஜினியின் அடுத்த படம் குறித்து உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இயக்குனர் நாக் அஸ்வின் கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’, பிரபாஸின் ‘கல்கி 2898AD’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். எனவே இவர் ரஜினியை இயக்க உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.