தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் ‘விடுதலை 2’ திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர், சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்த அறிவிப்பு இன்னும் 10 முதல் 15 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வெற்றிமாறன், சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட்டாகி இருந்தார். ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இது தவிர வெற்றிமாறன், கிராஸ் ரூட் கம்பெனியின் மூலம் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அனுராக் காஷ்யப் உடன் இணைந்து பேட் கேர்ள் எனும் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இதனை வெற்றிமாறனின் உதவியாளர் வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதன் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 1) சென்னையில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய வெற்றிமாறன், “தயாரிப்பாளராக பணிபுரிவது மிகவும் கடினமானது. என்னை போன்ற நபர்கள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்துவது மிகவும் சவாலாக இருக்கிறது. எனவே இந்த பேட் கேர்ள் படத்துடன் நான் படம் தயாரிப்பதிலிருந்து விலகிக் கொள்கிறேன். இதுதான் நான் தயாரிக்கும் கடைசி படம்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -