செங்கோட்டையனின் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும், அவருக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள், எந்த நிபந்தனையும் இல்லை எங்களை கட்சியில் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்கிறார்கள். இதனையேற்று எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றிபெறும் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், “அதிமுக துவங்கிய நாட்களில் இருந்து தற்போது வரை, அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்த நாட்களில் இருந்து தற்போது வரை இந்த இயக்கத்திற்காக உழைத்து வருபவர் செங்கோட்டையன். இந்த இயக்கத்திற்கு பல்வேறு வந்த போது இந்த இயக்கத்திற்காக அனைத்து மக்களையும் அரவணைத்து, இந்த இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர் செங்கோட்டையன். அவரது எண்ணம் மனசாட்சி நிறைவேறுவதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.அதற்காக தான் நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக அதிமுக வெற்றி பெற முடியாத சூழலில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அதிமுக பிரிந்து கிடப்பது. எனவே அதிமுக வெற்றி பெற ஒன்றிணை வேண்டும். அதிமுக தொண்டர்கள் இயக்கம். இந்த இயக்கத்திலிருந்து தொண்டர்களை யாரும் வெளியேற்ற முடியாது.” என்று தெரிவித்தார்.
அப்போது இரண்டு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின் நோக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு,
“அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்று பதில் அளித்தார். மேலும், “அதிமுக ஒன்றிணை வேண்டும் என்று யார் குரல் கொடுத்தாலும் அவருக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம்” என்றும் ஓ.பன்னீர் செல்வம் உறுதிபட தெரிவித்தார்.