தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூல் என்ற இலக்கு இன்னும் எட்டப்படாத எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாயை அசால்டாக தட்டி தூக்கி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்கள் பெரிய அளவில் ஏமாற்றத்தை தந்தது. இது தவிர தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடியை எட்ட முடியாததற்கு பான் இந்தியா ஸ்ட்ராடஜி போன்ற இன்னும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளிவரும்போது இந்த படம் ஆயிரம் கோடியை கடந்து விடுமா? என்று ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடனும், மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்தது ‘ஜெயிலர் 2’ படம் ஆயிரம் கோடி ரூபாயை கடந்து விடும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில், கோலிவுட்டில் ஆயிரம் கோடி வசூல் குறித்து பேசி உள்ளார்.
அதன்படி அவர், “தமிழ் சினிமா அந்த இடத்தை அடைகிறது என்று நான் நம்புகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் ஆயிரம் கோடியை எட்ட முடியும். பல தமிழ் படங்கள் ஆயிரம் கோடி ரூபாயை எட்ட தவறி விட்டன. ஏனெனில் அவற்றில் கதை சொல்லும் தரம் இல்லை அல்லது அது பான் இந்திய படமாக இல்லை. தரத்தை தவிர டிக்கெட் விலையும் இருக்கிறது. பெங்களூரு, மும்பை அளவிற்கு நாம் கட்டணம் வசூலித்தால் ஜெயிலர் படமும் 800 முதல் 1000 கோடியை எளிதாக கடந்திருக்கும். டிக்கெட் விலையை அதிகரிப்பதை நான் ஆதரிக்கவில்லை. இருப்பினும் எங்களுடைய படத்திற்கு வட இந்திய ஊடுருவல் தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -