தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது ‘டாக்ஸிக்’, ‘டியர் ஸ்டுடென்ட்ஸ்’, ‘மண்ணாங்கட்டி’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் கவினுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது தவிர தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் என்ற தலைப்பில் நயன்- விக்கியின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்டது. இதன் ட்ரெய்லர் வெளியான போதே தனுஷ் தயாரித்திருந்த ‘நானும் ரெளடி தான்’ படத்தின் மூன்று நிமிட காட்சிகள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதற்காக நடிகர் தனுஷ், ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு புதிய சிக்கல் வந்துள்ளது. அதாவது ரஜினியுடன் நயன்தாரா நடித்திருந்த ‘சந்திரமுகி’ பட காட்சிகள் அந்த ஆவணப்படத்தில் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதாக கூறி, அந்த காட்சிகளை நீக்க வேண்டுமென ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், நயன்தாராவின் ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ பட காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதன் மூலம் இதுவரை கிடைத்த லாபத்திலிருந்து ரூ.5 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஆவண படத்தின் தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு வருகின்ற அக்டோபர் 6ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
- Advertisement -