கூலி படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவரது நடிப்பில் உருவாகியிருந்த ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியிருந்தார். அனிருத் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருந்தனர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகார்ஜுனா, சௌபின் சாகிர் ஆகியோர் வில்லன்களாக நடித்திருந்தனர். இது தவிர உபேந்திரா, அமீர்கான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். மேலும் நடிகை பூஜா ஹெக்டே ‘மோனிகா’ எனும் பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்து ஆட்டம் போட வைத்தது. இந்நிலையில் ‘மோனிகா’ வீடியோ பாடல் இன்று (செப்டம்பர் 11) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் கூலி திரைப்படமானது இன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.