இப்போது இருக்கக்கூடிய தலைமுறைக்கு பெரியாரை கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது என திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் கூறியுள்ளாா்.சென்னை பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அண்ணா பொது விவகார ஆய்வு மையம் மற்றும் திராவிட வரலாற்று ஆய்வு மையம் இணைந்து நடத்தும் ‘நூற்றாண்டு சுயமரியாதை பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தின் கீழ் மரபு’ என்ற தலைப்பிலான 2 நாள் தேசிய கருத்தரங்க சென்னை பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் கருத்தரங்கத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் , சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி விமலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் அரசியல் பாதை என்ற தலைப்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் மாணவர்களிடம் கலந்துரையாடினார். ஒரு மக்கள் பிரதிநிதியாக அவர்களின் பல்வேறு குறைகளை தீர்க்கும் கடமையில் உள்ள நான் தற்போது ஒரு சித்தாந்த உரையாடலுக்காக வந்துள்ளதாக தெரிவித்தார்.
தாய்மொழி உணர்வு, தமிழ்நாட்டின் சுயமரியாதைக் கொள்கை, சமூக நீதி , தமிழ்நாட்டின் சாமானிய அரசியல் புரிதல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கருத்துகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டின் சாதிய அமைப்பு பற்றி மாணவி ஒருவரின் கேள்விக்கு, ஜப்பானில் மிகப்பெரிய ஜாதிய வேறுபாடுகள் இருந்தது. ஆனால் அவர்கள் ஜாதியை ஒரு நோய் என நினைத்து நீக்கி விட்டார்கள். அதேபோல ஜாதியை மக்கள் சமூக ரீதியாக விட வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஜாதியை விட வேண்டிய பங்கு என்பது நமது தலைமுறையிலிருந்து தொடங்கும். பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் பொதுமக்களும் ஒரே அரங்கத்தில் சரிசமமாக அமர்கின்றனர் அதற்கான வாய்ப்புகளை சமூக நீதி நிகழ்ச்சிகள் தருகிறது மருத்துவ கல்லூரிகளில் அதிக சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறும் அதற்கு காரணம் அங்கு பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் வந்து பயிலும் வகையில் இட ஒதுக்கீடு உள்ளது. இதே போன்ற சமூக மாற்றம் வெகுஜன மக்களிடையே இருக்க வேண்டும்.

பல்வேறு நாடுகளில் சமூக மாற்றம் என்பது புரட்சியின் மூலமாகத்தான் ஏற்படும். ஆனால் நமது தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட புரட்சி ஏற்படாமலேயே ஒரு சமூக மாற்றத்தை நாம் அடைந்து விட்டோம். ஜாதி பார்ப்பதை ஜாதியை பாகுபாடை நாம் எப்பொழுது ஒரு அழுக்கு என்று நினைக்கிறோமோ அப்பொழுது ஜாதி ஒழிந்து விடும். அதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு அம்பேத்கரின் அணிலேஷன் ஆப் கேஸ்ட் என்ற புத்தகம். அதில் அவர் சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் சடங்கு முறைகளையும் சம்பிரதாயம் முறைகளையும் நீக்க வேண்டும் என்றும், இந்த சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாத பௌத்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார். தற்போது இருக்கக்கூடிய மூடநம்பிக்கைகளை உள்ளடக்கிய கௌதம் அல்லாமல் சமத்துவமான ஒரு மதத்தை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார். அதேபோல பெரியாரும் மதம் என்ற ஒன்று உலகில் தேவையில்லை என்றும் உலக அறிவியலை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். அனைத்தையும் அறிவியல் பார்வையில் நான் பார்க்கிறேன். அதனால் எனக்கு கடவுள் தேவைப்படுவது கிடையாது. அப்படி அவர்கள் கூறிய வகையில் நான் பயணிக்கிறேன். அப்படி பார்க்கும்போது நானும் உங்கள் சக தோழன் தான் எனக் கூறினார்.
தொடர்ந்து பெரியாரின் கொள்கைகளை தற்போதைய இளைய தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்வது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இப்போது இருக்கக்கூடிய தலைமுறைக்கு பெரியாரை கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்களே படித்து தெரிந்து கொள்வார்கள் அவர்கள் பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தும் தலைமுறையாக இருக்கிறார்கள். தற்போதைய இளைய தலைமுறையை நீங்கள் குறை சொல்லாதீர்கள் அன்றைய காலம் முதல் பயன்படுத்தி வரும் நடைமுறைகளில் அவர்கள் இல்லை. உங்களுக்கு அவர்களின் மொழி புரியவில்லை அவர்களுக்கு புரியும்படி அவர்கள் வழியில் கூறினால் அவர்கள் கவனிப்பார்கள் என்று பதிலளித்தாா்.