“ஐ.டி.துறையில் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்…”
சென்னை நந்தம்பக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் முதல் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் போக்குவரக்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, விஞ்ஞானி ஏ.சிவதாணுப் பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொறியியல் தமிழர்களின் இரத்தத்தில் ஊறியுள்ளது என்பதற்கான சான்றுகள், பல நூறு வருடங்களுக்கு முன்பாக தமிழர்களால் கட்டப்பட்ட துறைமுகங்கள் என்றார்.
தமிழர்கள் உலகமெங்கும் இருக்கும் வர்த்தக மையங்களுடன் பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள் என்றும் இதற்கான சான்றுகளாக கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய காசுகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் மிகப்பெரிய அணைகள் மற்றும் மிக சிறந்த கோவில்களை தமிழக பொறியாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கட்டி வருவதை குறிப்பிட்ட அமைச்சர் பி.டி.ஆர்., குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மழை நீர் வடிகால்வாய்களுக்கு ஏற்றவாறு சாய்ந்த கூரையிலிருந்து வடியும் துவாரங்களுடன் தூண்கள் வழியாக நிலத்திற்கு மழை நீர் சென்றடைவதை பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டினார்.
தமிழகம் பொறியியல் துறையில் மிக சிறந்து விளங்குவதற்கு காரணம் பாரம்பரியத்தை கடைப்பிடிப்பது மட்டுமில்லாமல் அனைவருக்கும் இளநிலை கட்டாய கல்வி என்ற திட்டம் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு நீதி கட்சியின் சார்பில் 1921 ஆம் ஆண்டு வழங்கப்பட்டதும் ஒரு அடித்தளம் என அவர் தெரிவித்தார்.
மேலும் பள்ளிகளில் உணவு, இலவச மிதிவண்டிகள், மடிக்கணினிகள் ஆகிய பல்வேறு திட்டங்கள் தமிழகம் முழுவதும் கல்வியினை ஊக்குவித்ததன் காரணமாக உலகம் முழுவதும் தமிழகம் முதுநிலை கல்வியில் முதன்மை இடம் பிடித்துள்ளது என்று பி.டி.ஆர். கூறினார்.
தமிழகத்தில் ஏறத்தாழ 54 சதவீத மாணவர்கள் முதுநிலை கல்வியில் ஆர்வம் காட்டி கல்வியினை பயில்கின்றனர் என்றும் தமிழகம் இந்தியாவின் 6 சதவீத மக்கள் தொகையை மட்டுமே கொண்டிருந்தும் இந்திய பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் வகித்து வருகிறது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழகத்தின் ஐ.டி. சேவைகள் உலகமெங்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஐ.டி. துறையை பொருத்தவரை சென்னையில் பணிபுரியும் நபர்கள் ஏறத்தாழ 80 சதவீத பணியாளர்கள் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்றும் மேலும் கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள் சுமார் 100 சதவீதத்தினர் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் தமிழர்களின் தாக்கம் அதிகரித்து வருவதற்கு தமிழகம், பெங்களூர், ஹைதராபாத் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் முதன்மை பொறுப்புகளில் இருப்பவர்கள் தமிழர்களாகவே இருப்பது சான்று என அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் 20 வருடங்கள் தாம் வசித்த போதே தமிழ் மக்கள் ஐ.டி. துறையில் அளித்த பங்களிப்பு 5–6 சதவீதம் இருந்தது என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நினைவு கூர்ந்தாா்.