“ஆளுநர்கள் கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டு மசோதாவை படிக்க பல மாதங்கள் எடுத்துக்கொள்ள முடியாது” என்று : உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கடுமையாக விமர்சித்தது.மசோதாக்களை நிறுத்தி வைக்க குடியரசு தலைவருக்கும் ஆளுநருக்கும் எந்த தனி அதிகாரமும் கிடையாது என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், இழுத்தடிக்கும் ஆளுநர்களுக்கு எதிரான வழக்கில் குடியரசு தலைவர் மூலம் உச்சநீதிமன்றத்திற்கு கேள்வி எழுப்பிய ஒன்றிய அரசின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மசோதாக்களை நிறுத்தி வைக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநர்களுக்கும் எந்த தனி அதிகாரமும் வழங்கப்படவிலலை. அரசுடன் நெருங்கிய உறவு வைத்துள்ள ஆளுநர்கள் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படும் நிலையில, மற்ற மாநிலங்களில் ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது. மசோதாக்களுக்கு ஆளுநர்கள் உடனடியாக ஒப்புதல் வழங்காததால், நீதிமன்றத்தை நாட வேண்டி சூழல் உருவாகின்றது. ஒன்றிய அமைச்சரவை முடிவுபடி எப்படி குடியரசு தலைவர் செயல்படுகிறாரோ, அதேபோல், ஒன்றிய அமைச்சரவை முடிவுகளைப் போலவே, மாநில அமைச்சரவை முடிவுகளையும் ஆளுநர் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மசோதாக்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களை ஆளுநர்கள் தெளிவுபடுத்த வேண்டும். அந்த காரணங்கள் நீதித்துறை ஆய்வுக்குட்பட்டவை. சட்டமன்றத்தின் செயல்பாட்டை ஆளுநர்கள் சீர்குலைக்க முடியாது; அவர்கள் சட்டமன்றத்திற்கு எதிராக செயல்பட அனுமதிக்கப்படவில்லை” என்றும் தெரிவித்தார்.
ஆளுநர்கள் கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டு மசோதாவை படிக்க பல மாதங்கள் எடுத்துக் கொள்வது ஏற்புடையதல்ல.”என்றும் தெரிவித்தார். இதையடுத்து, “குடியரசுத் தலைவர் மசோதாவை திருப்பி அனுப்பும் போது, நாடாளுமன்றம் மறுநிறைவேற்றம் செய்து மீண்டும் அனுப்பினால் அதை கிடப்பில் போடாமல், ஒப்புதல் கொடுத்தேதான் ஆக வேண்டும். அதே வழிமுறை ஆளுநருக்கும் பொருந்தும் தானே?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளாா்.