விஜயின் மற்றொரு சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது ‘ஜனநாயகன்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. அரசியல் சார்ந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த ஆண்டில் விஜயின் படங்கள் எதுவும் திரைக்கு வராதா? என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘சச்சின்’, ‘கில்லி’ ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி நடைபோட்டது. அடுத்தது விஜயின் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இந்நிலையில் மற்றொரு சூப்பர் ஹிட் படம் ரீ- ரிலீஸ் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறது.

கடந்த 2000 ஆம் ஆண்டு விஜய்- ஜோதிகாவின் நடிப்பில் குஷி திரைப்படம் வெளியானது. எஸ்.ஜே. சூர்யா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் விஜய் – ஜோதிகா ஜோடி இன்று வரையிலும் பலருக்கும் பேவரைட்டாக இருக்கிறது. காதலில் ஈகோ இருந்தால் எப்படி இருக்கும் என்பதை காமெடியாகவும், ரொமான்டிக்காகவும் காட்டியிருந்தனர். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதி ரீ- ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது.