ரஜினி- கமல் படத்தை இயக்கப் போவது லோகேஷ் கனகராஜ் இல்லை என்றும் இதனை வேறொரு இயக்குனர் இயக்கப்போகிறார் என்றும் புதிய தகவல் கிடைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார் நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் இணைந்து 70, 80 காலகட்டத்தில் அபூர்வராகங்கள், 16 வயதினிலே, மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து இருவருமே தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி, இன்றுவரையிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கப்போவதாக சமீப காலமாக பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதனை உறுதி செய்திருந்தார். அடுத்தது ரஜினியும், கமலுடன் இணைந்து நடிக்கிற மாதிரி பிளான் இருக்கிறது ஆனால் டைரக்டர் முடிவு செய்யப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் கமல்- ரஜினி இருவரும் இணையப்போகும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி, லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க வாய்ப்பில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ரஜினி- கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தை யார் இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி ‘லவ் டுடே’ என்ற ஹிட் படத்தை கொடுத்து இந்திய அளவில் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.
அதாவது பிரதீப் ரங்கநாதன் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களுக்கு பிறகு ‘எல்ஐகே’, ‘டியூட்’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை எனவும், ஆகையினால் இவர், ரஜினி- கமல் படத்தை இயக்கக்கூடும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ரஜினி – கமல் இருவரையும் இயக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


