பெருந்துறை பண்ணையில் வனத்துறை நடவடிக்கை — வழக்குப்பதிவைத் தொடர்ந்து வன விலங்குகள் மாற்றம் நடிகர் விக்ரம் வீடியோ சர்ச்சையில் சிக்கிய அரிய வகை ‘லார் கிப்பான்’ குரங்குகள் உள்ளிட்ட 11 வன விலங்குகளை, ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலிருந்து நாளை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ:
அழிந்து வரும் அரிய வன விலங்குகளின் பட்டியலில் உள்ள ‘லார் கிப்பான்’ (Lar Gibbon) வகை மனித குரங்குடன் நடிகர் விக்ரம் கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவின் பின்னணி குறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த மனித குரங்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் கேசவநாதன் என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
வனத்துறை ஆய்வு & வழக்குப்பதிவு:
இதனைத் தொடர்ந்து, தொழிலதிபர் கேசவநாதனின் பண்ணை வீட்டில் கடந்த வாரம் வனத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், சட்டத்திற்குப் புறம்பாகவும் விதிகளை மீறியும் வன விலங்குகள் வளர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கேசவநாதன் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன் (Wildlife Protection Act 1972) கீழ் இரண்டு பிரிவுகளில் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் அந்தப் பண்ணையைத் தங்களது முழுச் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த வனத்துறையினர், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வன ஊழியர்களை நியமித்துப் தீவிரப் பாதுகாப்பு அளித்து வந்தனர்.
11 வன விலங்குகள் பறிமுதல்:
பண்ணையில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், 2 ‘லார் கிப்பான்’ மனித குரங்குகள் மட்டுமன்றி, சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த பல்வேறு அரிய வகை விலங்குகளும் கண்டறியப்பட்டன
2 ‘லார் கிப்பான்’ வகை மனித குரங்குகள்
7 ‘ஆப்ரிக்கன் செர்வால் கேட்’ (African Serval Cat) எனப்படும் நெடுங்கால் பூனைகள்
2 ‘டஃப்டெட் கபுச்சின்’ (Tufted Capuchin) எனப்படும் அடற்சுருட்டை வால் குரங்குகள்
நாளை வண்டலூர் பூங்காவிற்கு மாற்றம்:
விதிமீறலில் சிக்கிய இந்த 11 அரிய வகை வன விலங்குகளையும் நீதிமன்றத்தின் உரிய அனுமதியைப் பெற்று, நாளை (ஆகஸ்ட் 20) சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வனத்துறையினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
