கார்த்தியின் சர்தார் 2 பட ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கார்த்தி கடைசியாக ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது ‘கங்குவா’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவர் ‘மார்ஷல்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் ‘வா வாத்தியார்’ எனும் திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இந்த படம் 2025 டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இவருடைய நடிப்பில் சர்தார் 2 எனும் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்த நிலையில் இதன் அடுத்த பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், சாம். சி.எஸ் -ன் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. படத்தில் கார்த்தியுடன் இணைந்து மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடிக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இருப்பினும் இப்படம் எப்போது வெளியாகும்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த வகையில் இந்த படத்தினை அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.