விஷால் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் புரட்சித் தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஷால் தற்போது ‘மகுடம்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்னதாக இவரது நடிப்பில் ‘மதகஜராஜா’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்க சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் விஷாலுடன் இணைந்து நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து வெளியான இந்த படம் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் சுந்தர்.சி – விஷால் கூட்டணி இணையப் போவதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் இவர்களது கூட்டணியிலான புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் எனவும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படமானது ‘மதகஜராஜா’ படத்தை போல காமெடி கலந்த ஆக்சன் படமாக உருவாக இருக்கிறதாம். சுந்தர்.சி, இந்த படத்தின் படப்பிடிப்பை மூன்று மாதத்திற்குள் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகிறார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படமும் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தான் திரைக்கு வரும் என சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.