யாஷின் கே.ஜி.எஃப் 3 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.கன்னட சினிமாவில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘கே.ஜி.எஃப் சாப்டர் 1’. ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதுமட்டுமில்லாமல் நடிகர் யாஷுக்கு, ராக்கி பாய் என்ற கதாபாத்திரம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதைத்தொடர்ந்து வெளியான ‘கே.ஜி.எஃப் சாப்டர் 2’ திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி ரூ.1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து ருத்ர தாண்டவம் ஆடியது. இதை தொடர்ந்து யாஷ், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ‘டாக்ஸிக்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ‘ராமாயணா’ திரைப்படத்தில் ராவணனாக நடித்து வருகிறார் யாஷ். இப்படம் 2026 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு யாஷின் கைவசம் அடுத்தடுத்த படங்கள் இருக்கும் நிலையில் பிரபல தமிழ் இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அதன்படி பி.எஸ். மித்ரன், யாஷை இயக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கே.ஜி.எஃப் 1 மற்றும் 2 ஆகிய படங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இதன் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதே சமயம் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் ‘கே.ஜி.எஃப் 3’ படத்தில் நடிகர் அஜித் நடிக்கலாம் என்பது போன்ற செய்திகளும் வெளிவந்தது.
இந்நிலையில் ‘கே.ஜி.எஃப் 3’ திரைப்படம் யாஷின் மற்ற கமிட்மெண்டுகள் எல்லாம் முடிந்த பின்னர் தான் தொடங்கும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ரசிகர்களும் ராக்கி பாயை மீண்டும் திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -