சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சூர்யா நடிப்பில் கடைசியாக ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களுக்கு பிறகு வெங்கி அட்லுரி இயக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், அனில் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இது தவிர இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது ஐரோப்பாவில் உள்ள பெலாரஸில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த படத்தை 2026 ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் பல தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.


