ரவி மோகன் நடிப்பில் உருவாகும் ஜீனி படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் ரவி மோகன் தற்போது கராத்தே பாபு, பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர ப்ரோ கோட் என்ற படத்தையும் கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் யோகி பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை தயாரித்து, இயக்கப் போகிறார். இவ்வாறு தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வரும் ரவி, ஜீனி என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அர்ஜுனன் இயக்க வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ஏ. ஆர். ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் பேண்டஸி ஜானரில் எடுக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி ஏறத்தாழ இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும், கிராபிக்ஸ் பணிகள் மீதம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. அதைத்தொடர்ந்து சமீபத்தில் இதன் முதல் பாடலும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த எந்த தகவலையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் இந்த படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

ரவியின் 32ஆவது படமான இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், க்ரித்தி ஷெட்டி, வாமிகா கேபி, தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.