கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் தவெக மனு அளித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் கொந்தளிப்பையும், சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும், அதன் காயம் அழியாத சோகவடுவாக மாறியுள்ளது. உயிரிழந்தவர்களின் குழும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலா ரூ. 20 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்து தவெக தலைவர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் விஜய், கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக நான் வருவேன் என கூறியுள்ளார். அவர் எப்போது கரூர் செல்வார் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கரூர் செல்ல அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி டி.ஜி.பி மற்றும் Y பிரிவு பாதுகாப்பு தலைமையகத்திற்கும் இ-மெயில் மூலமாக அக்கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் இதுவரை 33 பேரின் குடும்பத்தினரை விஜய் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், அவர்களிடம் காவல்துறை அனுமதி பெற்று நிச்சயம் உங்களை நேரில் வந்து சந்திப்பேன் என்று அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.