வா வாத்தியார் பட இயக்குனர் நலன் குமாரசாமி பேட்டி கொடுத்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நலன் குமாரசாமி. அதைத் தொடர்ந்து ‘காதலும் கடந்து போகும்’ படத்தை இயக்கிய இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வா வாத்தியார் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் கார்த்தி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து க்ரித்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து, படமானது வருகின்ற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து போஸ்டர்கள், முதல் பாடல், டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து பேட்டியில் பேசிய நலன் குமாரசாமி, “இந்தியாவில் நம் உணவு மற்றும் கலாச்சாரம் தனித்துவமானதை போல் நமது படங்களும் தனித்துவமானது. இன்று நாம் தயாரிக்கும் படங்கள் தில்லானா மோகனாம்பாள், ரத்தக்கண்ணீர், வள்ளி திருமணம் போன்ற கிளாசிக் படங்களுடன் ஏதோ ஒரு வகையில் கனெக்ட் ஆகி இருக்கிறது என்று நான் நம்புகிறேன். எனவே இது ஒரு பாரம்பரியம். அந்த பாரம்பரியத்திற்குள் மசாலா படங்கள் வருகிறது. அதனால் தரமான மசாலா படங்களை உருவாக்குவது மிகவும் முக்கியம் என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.