நடிகர் சிம்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிம்பு, கடைசியாக கமல்ஹாசன் உடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் இவர், ராம்குமார் பாலகிருஷ்ணன், தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ஆனால் சிம்பு அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தீபாவளிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ இன்று (அக்டோபர் 16) மாலை 6.02 மணி அளவில் திரையரங்குகளிலும் நாளை (அக்டோபர் 17) காலை 10.07 மணி அளவில் சமூக வலைதளங்களிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக நடிகர் சிம்புவும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “என் ரத்தங்களே, வெற்றிமாறன் சாரின் அரசன் பட ப்ரோமோவை தியேட்டர் வெர்ஷனில் இசையுடன் பார்த்தேன். நா சொல்றேன். டைம் கிடைச்சா தியேட்டர்ல பாத்துடுங்க. திரையரங்க அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிம்புவே தியேட்டர்ல போய் பார்க்க சொல்றாருன்னா ‘அரசன்’ ப்ரோமோ அந்த அளவிற்கு தரமாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.


