மகுடம் படத்தை விஷால் இயக்குவது தொடர்பாக ரவி அரசு பேசியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் ‘ஈட்டி’ படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரவி அரசு. அதைத்தொடர்ந்து இவர் ‘ஐங்கரன்’ எனும் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். தற்போது இவர், விஷாலை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். விஷாலின் 35வது படமான இந்த படத்திற்கு ‘மகுடம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷால் மூன்று கெட்டப்புகளில் நடிப்பது போல் தெரிகிறது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்திலிருந்து முன்னோட்ட வீடியோவும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலானது. இது தவிர இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 26 அன்று திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் படைப்பாற்றல் வேறுபாடு காரணமாக ரவி அரசுக்கு பதிலாக இந்த படத்தை விஷால் இயக்குகிறார் என சமீபத்தில் பல தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து இயக்குனர் ரவி அரசு, “அது போலியான செய்தி. மகுடம் படத்தை நான்தான் இயக்குகிறேன். ஐந்தாவது கட்டப் படப்பிடிப்பு தீபாவளிக்கு பிறகு தொடங்குகிறது. விஷால் இந்த படத்தை இயக்கவில்லை. நான் தான் இயக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம் விஷால் ஒரு மாஸ் ஹீரோ என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, அவரே இணை இயக்குனராக பொறுப்பேற்று சில காட்சிகளை இயக்கினாராம். மற்றபடி ரவி அரசு இந்த படத்தில் இருந்து நீக்கப்படவில்லை என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


