துருவ் விக்ரமின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சியான் என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விக்ரமின் மகன் தான் துருவ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கு ரீமேக்கான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தது இவர் விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய கேரக்டர் முக்கியமான கேரக்டராக அமைந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் இவர் சிறிய இடைவெளிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. மாரி செல்வராஜின் மற்ற படங்களை போல் இந்த படமும் வலுவான திரைக்கதையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அத்துடன் இந்த படத்திற்காக கடினமாக உழைத்த துருவ் விக்ரமுக்கும் பாராட்டுகள் குவிகின்றன. இந்நிலையில் துருவ் விக்ரமின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது துருவ், பைசன் படத்தை தொடர்ந்து ‘டாடா’ படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

இயக்குனர் கணேஷ் கே பாபு தற்போது ரவி நடிப்பில் ‘கராத்தே பாபு’ படத்தை இயக்கி வருகிறார். எனவே அந்தப் படத்தை முடித்த பிறகு துருவ் விக்ரமின் புதிய படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.