‘NEEK’ ஹீரோ பவிஷின் புதிய படத்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா தொடங்கி வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி தனுஷின் இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் – NEEK’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். இவருடன் இணைந்து அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், சரத்குமார், சரண்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து இவர் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்குகிறார். இவர் ‘போகன்’ படத்தின் இயக்குனர் லக்ஷ்மணனின் உதவி இயக்குனர் ஆவார். இந்த படத்தில் தெலுங்கு யூடிபரான நாக துர்கா கதாநாயகியாக நடிக்கிறார். சினிமா மீடியா நிறுவனமும் கிரியேட்டிவ் என்டெயினர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இப்படமானது கலர் ஃபுல்லான காதல் கதையில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 27) இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தனுஷின் தந்தையும், பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜா தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


