ஆர்யன் படத்தை பார்க்க வருபவர்கள் ராட்சசன் படத்தை பார்க்க வேண்டாம் என்று விஷ்ணு விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று (அக்டோபர் 31) உலகம் முழுவதும் வெளியாகும் திரைப்படம் தான் ‘ஆர்யன்’. இந்தப் படத்தை விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார். பிரவீன் கே இந்த படத்தை இயக்க ஜிப்ரான் இதற்கு இசையமைத்துள்ளார். சைக்கோ திரில்லர் படமான இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே ‘ராட்சசன்’ திரைப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நிலையில், மீண்டும் ஒரு கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் மானசா சௌத்ரி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கடந்த மூன்று வருடங்களாக நான் தனியாக ஹீரோவாக நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. ஆர்யன் என்ற படம் அந்த இடைவெளிக்கு பிறகு வெளியாகும் சரியான படம் என்று நான் உணர்கிறேன். ஏனென்றால் இந்த படம் நான் எதிர்பார்த்த அனைத்தையும் கொண்டுள்ளது. தீவிரம், புதுமை, சுவாரஸ்யம், இதற்கு முன் நான் எந்த படத்திலும் செய்யாத தனித்துவம் இந்த படத்தில் இருக்கிறது. என் இயக்குனர் பிரவீனுக்கு நன்றி. எங்கள் எடிட்டர் ஷேன் லோகேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனுக்கும் நன்றி. இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு நன்றி.
இது தவிர செல்வராகவன், ஷ்ரத்தா, மானசா ஆகியோருக்கு நன்றி. இந்த படத்திற்காக தங்கள் முழு அர்ப்பணிப்பை கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. சில படங்களை பார்க்கும்போது, ‘மூளையை வீட்டில் விட்டுட்டு போங்க’ என்று சொல்வார்கள். ஆனால் ஆர்யன் படத்தை பார்க்கும்போது, படத்தை அனுபவிக்க சிந்தனையை கொண்டு வாருங்கள். இன்னும் ஒரு சிறிய வேண்டுகோள், ஆர்யன் படத்தை பார்க்கும் முன் ராட்சசன் படத்தை பார்க்காதீர்கள். இதை புதிய அனுபவமாக உணருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.


