நரைமுடி கருப்பாக செய்ய வேண்டியவை.
நரைமுடி என்பது பல காரணங்களால் ஏற்படுகிறது. அதில் இயற்கையான காரணங்களாலும், வாழ்க்கை முறை காரணங்களாலும் நரைமுடி உண்டாகின்றன. இயற்கையான காரணங்கள் என்று பார்த்தால், வயது அதிகரிப்பதால் மெலனின் என்ற நிறப்பொருள் குறைந்து, தலைமுடி நரையாக மாறுகிறது. அதேபோல் மரபியல் காரணங்களாலும் நரைமுடி ஏற்பட வாய்ப்புண்டு. இது தவிர வாழ்க்கை முறை காரணங்கள் என்று பார்த்தால், இரும்புச் சத்து, வைட்டமின் B12, ஜிங்க், அயோடின் போன்ற சத்துக்கள் போதிய அளவில் இல்லாததாலும், அதிக மன அழுத்தம், ஹார்மோன்கள் சமநிலையின்மை, தலைமுடி பராமரிப்பு குறைபாடு போன்ற பல காரணங்களால் இளம் வயதிலேயே நரைமுடி ஏற்படுகிறது.

நரைமுடியை தடுப்பதற்கு கீரை வகைகள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகள் போன்றவைகளை எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் மன அழுத்தத்தை குறைப்பது, யோகா செய்வது, நிம்மதியான உறக்கம் போன்றவைகளை பின்பற்றுதலும் நல்ல பலன் தரும். அத்துடன் ஆரோக்கியமாக தயாரிக்கப்பட்ட எண்ணெயை தலைமுடியில் தேய்த்து வருவதாலும் நிரந்தர தீர்வு காணலாம்.
அதற்கு தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – 2 கப்
கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் கருஞ்சீரகத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். அடுத்தது ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தி, அதில் அரைத்து வைத்திருக்கும் கருஞ்சீரகப் பொடியை சேர்த்து கொதிக்க விட வேண்டும். 
தேங்காய் எண்ணெய்யானது நன்கு கொதித்து நிறம் மாறியவுடன் அதனை ஆற வைத்து வடிகட்டி பாட்டிலில் அடைத்துக் கொள்ள வேண்டும். இந்த கருஞ்சீரக எண்ணெயை தலையில் தடவி பத்து நிமிடங்கள் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


