திருட சென்ற இடத்தில் திடீர் என வந்த மின்சாரத்தால் மாட்டிய திருடன்; சிசிடிவி கேமராவை பார்த்து மறைந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வேலமுதலி தெருவை சேர்ந்தவர் முருகன். இவா் பாண்டிச்சேரியில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முருகன் கடந்த 31 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று இரவு வீட்டிற்கு வந்து மேல்  மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு வைத்திருந்த இரண்டு லேப்டாப்கள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தாா். மர்ம நபர்கள் யாரோ தனது லேப்டாப்பை திருடி சென்றது தெரிய வந்தது.
பின்னர் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் முருகன் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசாா் ஆய்வு செய்து, பார்த்த போது மர்ம நபர் ஒருவர் இரண்டு லேப்டாப்களை திருடி சென்றது தெரிய வந்தது. கடந்த 1 ஆம் தேதி அதிகாலை மின்சாரம் இல்லாத போது மர்ம நபர் முருகன் வீட்டு மாடிக்கு சென்று இரண்டு லேப்டாப்பை எடுத்து மீண்டும் படி இறங்கி வரும்போது திடீரென மின்சாரம் வந்தது. இதனால் அத்திருடன் செய்வதறியாமல், அங்கு இருந்த சிசிடிவி கேமராவை பார்த்து மீண்டும் மாடிக்கு ஓடி ஒளிந்துக் கொண்டாா்.

இந்த சிசிடிவி காட்சிகளை காட்சிகளின் அடிப்படையில் கடலூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சபரிநாதன் (21) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சபரிநாதன் மின்சாரம் இல்லாத போது வீட்டின் உள்ளே சென்று மீண்டும் இறங்கி வரும் பொழுது மின்சாரம் வந்தவுடன், ஓடி ஒளியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


