பிரித்விராஜ் நடிக்கும் விலாயத் புத்தா படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பிரித்விராஜ் சுகுமாரன். இவருடைய இயக்கத்தில் கடைசியாக ‘எம்புரான்’ திரைப்படம் வெளியானது. அதே சமயம் இவர், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரித்விராஜ். இதற்கிடையில் இவர், விலாயத் புத்தா எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
ஜெயன் நம்பியார் இயக்கியுள்ள இந்த படத்தில் அனு மோகன், டீஜய் அருணாச்சலம், ஷம்மி திலகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைக்க அரவிந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஊர்வசி தியேட்டர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படமானது ஜி.ஆர். இந்து போபன் எழுதியுள்ள ‘விலாயத் புத்தா’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தில் இருந்து டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகின்றன. இந்த படத்தின் டீசரிலும், பாடலிலும் ‘புஷ்பா’ படத்தின் ரெஃபரன்ஸ் காட்டப்பட்டிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


