
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து ஆலோசிக்கும் வகையில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கரூரில் கடந்த செப்.27-ம் தேதிதவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாகளில் வகுத்து சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் கடந்த 27ம் தேதி உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், பொதுக்கூட்டம், ரோடு ஷோக்கள் நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சில நாட்களுக்கு முன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நாளை அனைத்துக் கட்சி நடைபெறவுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள, அங்கிகரீக்கப்பட்ட தேசிய கட்சிகளான, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ், அங்கிகரீக்கப்பட்ட மாநில கட்சிளான, திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஐ, விசிக, நாம் தமிழர் மற்றும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாமக, மதிமுக, தவாக, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகள், ஆலோசனைகளின் படி வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


