ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் தற்போது தனது 69ஆவது படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை ஆகிய படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்கியுள்ளார். கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஆரம்பத்தில் இந்த படத்தின் கதையானது கமல்ஹாசனுக்காக எழுதப்பட்டது. அதன் பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் விஜய்க்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது அரசியல் கலந்த ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது என ஏற்கனவே தகவல் வெளியானது.
இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக, ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தருகிறது. அதே சமயம் இதன் முன்னோட்ட வீடியோவும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் நாளை (நவம்பர் 8) வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று (நவம்பர் 7) இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ப்ரோமோவில் பாடலின் தலைப்பு, பாடல் வெளியாகும் நேரம் அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அடுத்தது நேற்று படக்குழு வெளியிட்டிருந்த போஸ்டரில் நடிகர் விஜய், முறுக்கு மீசையில் ஸ்டைலாக காண்பிக்கப்பட்டிருந்தார். எனவே அதே தோற்றத்தில் தான் முதல் பாடலில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


