கட்டா குஸ்தி 2 படத்தில் இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களும் நடித்துள்ள நிலையில், புதிதாக நடிகர் கருணாகரன் இணைந்துள்ளார். இவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கட்டா குஸ்தி 2. இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குடும்ப உணர்வுகளும், குஸ்தி விளையாட்டையும் மையமாகக் கொண்டு உருவான அந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக கட்டா குஸ்தி 2 தற்போது தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். இருவரும் குஸ்தி வீரர்களாகவும், கணவன்-மனைவியாகவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. குடும்ப பின்னணியுடன் கூடிய ஆக்ஷன் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்திருந்த கருணாஸ், முனீஷ்காந்த், காளி வெங்கட், லிஸ்சி ஆண்டனி, ஸ்ரீஜா, கஜராஜ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேநேரத்தில், நடிகர் கருணாகரன் புதிய இணைப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை திரைப்படத்தில் நடித்திருந்த அவர், இந்தப் படத்தில் “பார்த்தா” என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் இருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம், 2026 ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
