SSMB 29 படத்தின் டைட்டில் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
SSMB 29 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படமானது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்க பிரித்விராஜ் சுகுமாரன் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரித்விராஜின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. கிட்டத்தட்ட ரூ.1000 கோடி பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வரும் நிலையில் இதன் படப்பிடிப்புகளும் ஓடிசா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேசமயம் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான நிகழ்ச்சியானது நவம்பர் 15-இல் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சியை நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதாவது இந்த படத்திற்கு ‘வாரணாசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் கசிந்திருந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி, இந்த படத்திற்கு ‘சஞ்சாரி’ என்று தலைப்பு வைக்க வாய்ப்பிருப்பதாகவும், இதுதான் உண்மையான டைட்டிலாக இருக்கக்கூடும் எனவும் பேச்சு அடிபடுகிறது.
எனவே ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் டைட்டில் ‘வாரணாசி’யாக இருக்குமா? அல்லது ‘சஞ்சாரி’யாக இருக்குமா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இப்படத்தின் உண்மையான டைட்டில் என்னவாக இருக்கும்? என்பதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


