நடிகர் அஜித் வீட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித், ‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து தனது 64வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே 64’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் அனிருத் இதற்கு இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சென்னை ஈசிஆரில் இருக்கும் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த தகவல் அறிந்த போலீசார் மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனராம்.

கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் ரஜினி, விஜய், திரிஷா, ரம்யா கிருஷ்ணன், எஸ்.வி. சேகர் போன்ற திரைப் பிரபலங்களின் வீடுகள், அரசியல் தலைவர்களின் வீடுகள், விமான நிலையங்கள், பள்ளிகளுக்கு சமூக ஊடகங்களின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சோதனை நடத்திய போது அது வெறும் புரளி என்று தெரியவந்தது. அதுபோல தான் தற்போது அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவலும் புரளி என்று தெரிய வந்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மிரட்டல் விடுத்த அந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.


