பாஜக சார்பில் அதிமுக உடன் கூட்டணி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு நயினாரிடமும், என்டிஏவில் இடம்பெற்றிருந்த கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அண்ணாமலையிடமும் வழங்கப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.


அதிமுக – பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக இடம்பெற்றுள்ள என்டிஏ கூட்டணியை பொறுத்தவரை, அவர்களுடைய பலம் திமுகவை வீழ்த்த போதுமானதாக இல்லை. எனவே அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், வெளியேறியவர்கள், முரண்பட்டு நிற்பவர்களை எல்லாம் ஒன்றிணைத்து என்டிஏவை வலிமைப்படுத்தினால் ஒழிய நம்மால் திமுகவை வீழ்த்த என்பது அமித்ஷாவின் எண்ணமாகும். ஆனால் எடப்பாடி பழனிசாமி சேர்க்க மாட்டேன். நாமே திமுகவை பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார்.
அதனால் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை எல்லாம் ஒன்றிணைத்து என்டிஏவை பலப்படுத்த அமித்ஷா பார்க்கிறார். அந்த முயற்சியில் அண்ணாமலையை இறக்கியுள்ளார். பாஜக தரப்பில் 2 திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. முதலாவது எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி கூட்டயை ஒருங்கிணைப்பது. அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டிருப்பது முந்தைய என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைப்பதாகும். அப்படி செய்யாவிட்டால் தென் தமிழ்நாட்டில் அவர்களால் வெற்றி பெற முடியாது. இதன் காரணமாகவே அண்ணாமலையை இறக்கிவிட்டிருக்கிறார்கள்.

டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என்று சொல்கிறார். ஆனால் அதை மிக எளிதாக அமித்ஷா தவிர்த்து விடுவார். அமித்ஷாவை பொருத்தமட்டில் அதிமுகவிடம் இருந்து அதிக இடங்களை வாங்க வேண்டும். அதற்கு பிரதிபலனாக எடப்பாடி பழனிசாமி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சொல்கிறார். அந்த இடத்தில் டிடிவி தினகரனின் கோரிக்கையை பாஜக ஏற்காது. பாஜகவை பொருத்தவரை 60 இடங்கள் வரை போட்டியிட விரும்புகிறது. ஓபிஎஸ், தினகரன் போன்ற கட்சிகளுக்கு கூடுதலாக 20 இடங்களை வாங்க உள்ளனர். ஆனால் அதில் ஒன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகிறது. அதை பொருத்திருந்து தான் பார்த்து ஆக வேண்டும். தினகரனுக்கு, பாஜகவை விட்டு தனியாக வெளியே செல்வதற்கு வேறு வாய்ப்புகள் கிடையாது. விஜயுடன், தினகரன் சேர்வது மிகவும் கடினமானதாகும். அதற்கு சாத்தியக்கூறுகள் கிடையாது.

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவதாக வெளியாகும் தகவல்கள் உண்மை கிடையாது. அவர் என்டிஏவில் இடம்பெற்றிருந்த கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே தினகரனை சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டு அரசியலை பொருத்தவரை பாஜக என்பது ஒரு மைனஸ் தான். பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தான் வாக்குகளை இழந்தோம் என்று அதிமுகவினரே சொல்லி உள்ளனர். தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக என்கிற கட்சி என்றைக்குமே ஏற்புடையது அல்ல.
அப்படி ஏற்புடையதாக இருந்தால் அவர்கள் என்றைக்கோ தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்திருப்பார்கள். பேரிடர் காலத்தில் கூட உதவாத ஒரு கட்சிக்கு எப்படி மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்க்க முடியும். பாஜக மக்களவை தேர்தலில் 11 சதவீதம் வாக்குகளை வாங்கியதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் உண்மையான வாக்கு சதவீதம் என்பது 5 சதவீதம் தான். உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் தனித்து நின்று பெற்ற வாக்குகள் அதுதான். அதை தாண்டி அவர்கள் வளர்ந்தார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்?

2026 சட்டமன்றத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் மோடி, பாஜக எதிர்ப்பு தான் பிரதானமாக இருக்கப் போகிறது. தமிழ்நாட்டின் ஒற்றை அச்சுறுத்தல் பாஜக தான். திமுக அரசுக்கு எதிரான மனநிலை பெரிதளவில் இருக்கவில்லை. கீழ்த்தட்டு மக்கள் ஆட்சியில் தங்களுக்கு செய்த நல்லது, கெட்டதை பொறுத்தே முடிவு எடுப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மேலே உள்ள மக்களுக்கு, வணிகம், சமூக அமைதி, மதவெறி, சமய சார்பின்மை போன்றவை எல்லாம் முக்கியமானதாகும். அவர்களுக்கு பாஜக தான் எதிரி.
விஜய் வருகையால் தமிழக அரசியலில் பெரிய அளவில் தாக்கம் இருக்கும். ஆனால் யார் முன்னிலை பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாது. காரணம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து தேர்தல் நடத்துகிற நாடு இது. காரணம் கடந்த முறை மக்களவை தேர்தலின் போது 7.25 சதவீதம் வாக்குகள் அதிகமாக பதிவாகி இருந்தது. பிறகு எப்படி நம்மால் பேச முடியும். எந்த மக்கள் பலமும் இல்லாத அண்ணாமலை கோவையில் அதிமுக வேட்பாளரை விட இரண்டு மடங்கு வாக்குகளை கூடுதலாக வாங்குகிறார். எனவே தேர்தல் முடிவுகளை நம்மால் கணிக்க முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


