நடிகர் கமல்ஹாசன், தலைவர் 173 குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ரஜினியின் 173-வது படத்தை கமல்ஹாசன் தான் தயாரிக்கிறார். சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் ‘தலைவர் 173’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தை சுந்தர்.சி இயக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ‘அருணாச்சலம்’ படத்திற்கு பிறகு சுந்தர்.சி – ரஜினி கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் திடீரென்று சுந்தர்.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ‘தலைவர் 173’ படத்தில் இருந்து தான் விலகுவதாக சுந்தர்.சி குறிப்பிட்டிருந்தார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. அதேசமயம் சுந்தர்.சி இந்த படத்தில் இருந்து விலகியதற்கான பல காரணங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இருப்பினும் உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது பேசிய கமல்ஹாசன், தான் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படம் குறித்து தன்னுடைய கருத்தினை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “நான் ஒரு முதலீட்டாளர், என்னுடைய நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை தான் நான் தேர்வு செய்ய வேண்டும். அவருக்கு பிடிக்கின்ற வரை நாங்கள் தொடர்ந்து தேடிக்கொண்டே இருப்போம்” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து அப்போது புதிய இயக்குனர் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கமல், “வாய்ப்பு இருக்கிறது. கதை நல்லா இருக்கணும். அவ்வளவுதான்” என்று கூறினார்.

மேலும் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் படம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “நாங்கள் ஒன்றாக நடிக்கும் இன்னொரு கதையையும் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்றார். அடுத்தது எந்த மாதிரியான கதையை எதிர்பார்க்கலாம்? என்று கேட்டனர். அதற்கு, “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்று பதிலளித்தார் கமல். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


