பிரபல தெலுங்கு ஹீரோவின் அடுத்த படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தென்னிந்திய திரை உலகில் நடித்து ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர் நடிகை சமந்தா. தமிழில் இவர் விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயர் பெற்றுள்ளார். உடல்நலம் சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் நடிப்புக்கு பிரேக் விட்டிருந்த சமந்தா தற்போது புதிய படங்களிலும், வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதேசமயம் அடுத்தடுத்த படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் இவருடைய தயாரிப்பில் ‘சுபம்’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சமந்தா.
இருப்பினும் இவருடைய தயாரிப்பில் முதல் படமாக உருவாக இருந்த ‘மா இண்டி பங்காரம்’ எனும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டிருந்தாலும் சமீபத்தில் தான் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து குல்சன் தேவையா, கௌதமி, திகந்த், மஞ்சுஷா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சமந்தா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படத்தை சிவா நிர்வனா இயக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
இயக்குனர் சிவா நிர்வனா, கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா – சமந்தா நடித்திருந்த ‘குஷி’ திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


