வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் தற்போது ‘சர்தார் 2’, ‘மார்ஷல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதற்கிடையில் இவர் ‘மெய்யழகன்’ படத்திற்கு முன்னதாகவே தனது 26வது படமான வா வாத்தியார் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருந்தார். இந்த படத்தை ‘சூது கவ்வும்’ படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்க, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதன் இசையமைப்பாளராகவும், ஜார்ஜ். சி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர்.
இதில் நடிகர் கார்த்தி, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக, போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இவருடன் இணைந்து கிரித்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஏறத்தாழ இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் பேட்ச் ஒர்க் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படமானது வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்னும் ஒரு வாரம் பேட்ச் ஒர்க் நடைபெறும் என்பதாலும், இதன் பிறகுதான் மற்ற வேலைகள் நடைபெறும் என்பதாலும் இந்த படத்தின் ரிலீஸை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் உண்மை என்றால், இனிவரும் நாட்களில் படக்குழு சார்பில் இது தொடர்பாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


